தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது.
அதன் தலைவராக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உறுப்பினர்களாக துணை முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர்களாக இருந்த கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். வேதா நிலையத்தை பராமரிப்பதற்கும், அங்குள்ள சொத்துக்களை பாதுகாப்பதற்கான பணிகளையும், இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் ஜெயலலிதா நிலத்திற்கான இழப்பீட்டு தொகை 67 கோடியே 95 ரூபாயை செலுத்தி அதிகாரபூர்வமாக ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது.
இதைத்தொடர்ந்து வேதா நிலையம் நினைவு இல்லத்தை எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 28-ஆம் தேதி திறந்து வைத்தார். ஜெயலலிதாவின் நினைவு இல்லம் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதை அடுத்து வீட்டுக்கு வெளியில் உள்ள பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிடவும், அனுமதிக்க திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நிறைவு பெற்றது. ஜெயலலிதாவின் வீட்டை கையகப்படுத்தி அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கை செல்லாது என்று தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.