ஜெயலலிதாவுக்கு மருத்துவ நெறிமுறை படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அப்போலோ மருத்துவர் நரசிம்மன் அரசு ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் 150 க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். அதன்படி நேற்று அப்போலோ டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர் நரசிம்மன் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ நெறிமுறை படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும், இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வரை அவர் நலமுடன் இருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொரு மருத்துவர் ரமேஷ் தெரிவித்ததாவது அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு எக்மோ கருவி பொருத்துவது குறித்து செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் ஆலோசித்த பின்னர் தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.