முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அந்த அடிப்படையில் விசாரணை ஆணையம் முன் சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார். அதன்பின் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர் ஆகியுள்ளார்.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற தான் கூறவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் இன்று நேரில் ஆஜராகி தெரிவித்துள்ளார். சசிகலா அழைப்பின் அடிப்படையில் அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் சென்றது குறித்து தெரியாது என்றும் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றது வரை தான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.