Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா வீடு விவகாரம் : “நீதிமன்றத்தை அணுகினால் சாதகமான தீர்ப்பை பெறலாம்” – வழக்கறிஞர்கள் கருத்து…!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் சாதகமான தீர்ப்பை பெறலாம் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்த போதும் சரி, இப்போதும் சரி பேசு பொருளாகவே இருந்திருக்கிறது. இந்த வீட்டை நினைவில்லமாக மாற்றுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு வேதா நிலையம் அமைந்துள்ள, 24 ஆயிரம் சதுரடி நிலத்திற்கும், கட்டுமானங்களுக்கும், மரங்களுக்கும் விலை என, 68 கோடி ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் 68 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்திய தமிழக அரசு, வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது.

ஆனால் 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு உரிமை மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு சட்டப்படி மறைந்த தலைவர்கள் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது பொது பயன்பாடு அல்ல என்ற கருத்தும் பரவலாக உள்ளது. நிலத்துக்கான இழப்பீடு குறித்த விசாரணைக்கு தீபா தீபக்கை அழைத்த போதும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைக்கு அழைக்காததால், இந்த நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் செல்லாது எனவும், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளதால், சாதகமான தீர்ப்பை பெறமுடியும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் வேதா நிலையத்தை கையகப்படுத்திய அரசு நடவடிக்கைகள் சரியானவையா என்றும்  கேள்விகள் எழுப்பப்படுகின்றன. வேதா நிலையத்தை அரசுடமை ஆக்கியது எதிர்த்து தீபா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, தீபக் தாக்கல் செய்த வழக்கு ஆகியவை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது அரசுடமை ஆக்கியதால் அவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு பட்டியலிட கோரி தீபக் தரப்பில் உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |