விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அதிமுக கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது, எங்களுடைய போராட்டத்தின் மூலம் திமுக கட்சிக்கு ஒரு செய்தி சொல்ல நினைக்கிறோம். அதிமுக கட்சியில் இருந்து கொண்டு 4 முறை முதல்வர் பதவியை அனுபவித்து விட்டு வீட்டு விட்டு கட்சி அலுவலகத்தையே கடைசியில் எட்டி உதைத்து அலுவலகத்தை சூறையாடி பத்திரம் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர்.
எங்கள் கட்சியில் உள்ள எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்கிவிடலாம் என நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. ஏனெனில் தொண்டர்கள் எப்போதும் எங்களுடைய பக்கமே இருக்கின்றனர். அவர்கள் பக்கம் ரவுடிகளும் குண்டர்களும் மட்டுமே இருக்கின்றனர். அதிமுகவில் தொண்டர்கள் இருக்கும் வரை யார் வந்தாலும் கட்சியை அழிக்க முடியாது. நூறு துரோகிகளை அதிமுக கட்சி பார்த்துள்ளது. பன்னீர்செல்வம் அதிமுக கட்சியையும், சின்னத்தையும் முடக்க நினைக்கிறார். அப்படிப்பட்ட ஒருவருக்கு எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் என்ற பதவியை வழங்கி இருக்கிறார். இன்று உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சார மீட்டர் பெட்டிகளிலும் பொருத்தப்பட இருக்கிறது.
அதிமுக கட்சியின் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் நாங்கள் பயந்து விடுவோமா? திமுக கட்சியைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. மின்சார துறை அமைச்சர் முதலில் சிறை செல்வது உறுதி. அவரைத் தொடர்ந்து ம. சுப்பிரமணியம் உட்பட அனைத்து அமைச்சர்களும் செல்வார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சிறைக்கு செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சிறைக்கு செல்வது ஒன்றும் புதிது கிடையாது. நாங்க ஏற்கனவே 7, 8 முறை சிறைக்கு சென்றுள்ளோம். இனி 6 மாதம் சிறைக்கு சென்றாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார்.