பொதுவாக பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்வதற்கு விரும்புவார்கள். சுற்றுலா செல்பவர்கள் உலகில் உள்ள பல இடங்களை பார்த்திருப்பார்கள். ஆனால் ஜெயிலை மட்டும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை யாராவது ஜெயிலுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் அவர்களுக்காக ஒரு சிறப்பு ஜெயில் சுற்றுலா இருக்கிறது. இந்த திட்டம் முதலில் ஜாதகம் மற்றும் ஜோசியத்தில் நேரம், கட்டம் சரியில்லை என்று நினைப்பவர்களுக்காக தொடங்கப்பட்டது. அதன்பின் அனைவருமே அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றுலா செல்வதற்கு 500 ரூபாய் செலுத்தினால் போதுமானது. இந்த பணத்தில் ஒரு இரவு ஒரு பகல் தங்கலாம். இந்த ஜெயில் சுற்றுலா எங்கிருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்.
அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானியில் உள்ள சிறைச்சாலை நிர்வாகம் தான் உலகிலே எங்கும் இல்லாத ஒரு புதுவிதமான திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். கடந்த 1903-ஆம் ஆண்டு ஹல்த்வானி ஜெயில் கட்டப்பட்டது. அதன்பின் சிறைச்சாலை வேறு இடத்திற்கு மாற்றப் பட்டதால் அந்த சிறைச்சாலையை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ஜெயிலை அதற்கு தகுந்த மாதிரி கட்டமைத்து பொதுமக்களை அன்போடு வரவேற்று சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உடைகள் வழங்கப்படுகிறது. அதன்பின் ஜெயிலில் உள்ள உணவு கூடத்திலேயே உணவும் சமைக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் ஜெயில் சுற்றுலாவுக்கு பொதுமக்கள் வருவதால் அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது.