பிரபல நடிகரின் மீது தொடரப்பட்ட வழக்கில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக படம் இருப்பதாக கூறி எதிர்ப்புகளும் கிளம்பியது. இதன் காரணமாக படத்தில் இருந்து சில காட்சிகளை படக்குழுவினர் நீக்கியதோடு, இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு ஜெய் பீம் திரைப்படம் ஒரு சிலரின் மத உணர்வுகளுக்கு எதிரானதாக இருக்கிறது என்று கூறி வேளச்சேரி காவல்நிலையத்தில், ஸ்ரீ ருத்ர வன்னிய சேவா சங்கம் சார்பில் சந்தோஷ் என்பவர் நடிகர் சூர்யா மீதும், இயக்குனர் ஞானவேல் மீதும் புகார் கொடுத்தார்.
இந்த புகார் கொடுப்பதற்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சந்தோஷ், ஜெய் பீம் திரைப்படம் ஜாதி, மத கலவரங்களை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் தரப்பில் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட புகாரை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.