ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் , லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக ஒரு காட்சியில் காட்டி இருப்பதாக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள சேந்திர கிராமத்தில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் “சிங்கம் சூர்யா நற்பணி இயக்கம்” என்ற பெயரில் ரசிகர் மன்றம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அந்தப் பகுதியில் ரசிகர் மன்றத்திற்கான பேனர்களை வைத்துள்ளனர்.இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சங்கத்தின் அக்னி கலசத்தை குறியீடாக வைத்து இருந்த காட்சி குறித்து சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து
அந்த பேனரை கடந்த 14ஆம் தேதி அந்த பகுதியை சேர்ந்த சிலர் தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த செந்தூரப்பாண்டி மற்றும் வேணுகோபால் உள்பட 4 பேர் மீது பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.