ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளரிடம் ஜெர்மனியை சேர்ந்த நபர்கள் போலி ரசாயன மருந்துகளை அனுப்பி வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
சென்னை அருகிலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவர் குன்றத்தூர் பகுதியில் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் ஆதம்பாக்கத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது, ஜெர்மனியை சேர்ந்த மத்தியாஸ் கட்ஸ்மித் மற்றும் பூஜா குமார் ஆகிய நபர்களுடன் எனக்கு ஆன்லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தினால் கடந்த ஜனவரி மாதம் இருவரும் எனக்கு ஜெர்மனியிலிருந்து ரசாயனப் பொருட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
அவர்கள் சொல்வதை நம்பி ரூபாய் 35 லட்சத்து 23ஆயிரம் பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு போலியான ரசாயன பொருட்களை அனுப்பி வைத்து மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முருகையா மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.