ராஜாத்தி அம்மாளுக்குச் செரிமான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக உயர் சிகிச்சைக்காக அவரை ஜெர்மன் அழைத்துச் சென்றுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக எம்.பி., கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமானக் கோளாறு பிரச்சனை காரணமாகக் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். செரிமான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள வீக்கம், வலி காரணமாக திட உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் திரவ வகை உணவுகளையே அவர் உட்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயர் சிகிச்சை வழங்குவதற்காக ராஜாத்தி அம்மாள் விமானம் மூலமாக ஜெர்மன் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் எம்.பி., கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர். அடுத்த 10 நாட்களுக்கு அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்ப இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.