ஜெர்மன் சில்லறை விற்பனையாளர்கள் உணவுப்பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். ஜெர்மன் மக்கள் வரும் மாதங்களில் அதிக உணவுச்செலவுகளுக்குத் தயாராக வேண்டும் என மியூனிக்நகரத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மையம், ifo நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஏறக்குறைய அனைத்து உணவு சில்லறை விற்பனையாளர்களும் மேலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இச்சூழ்நிலையில் பிற துறைகளிலுள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கும் பணவீக்க விகிதங்கள் இப்போதைக்கு அதிகமாகயிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ifoநிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் மொத்த நுகர்வோர் விலைகள் ஜூன் மாதத்தில் குறைந்தது. பணவீக்கம் 7.6 % ஆக குறைந்து இருக்கிறது என பெடரல் புள்ளியியல் அலுவலகத்தின் (Destatis) ஆரம்ப புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் எரிசக்தி விலைகள் தொடர்ந்து முக்கிய இயக்கியாக இருந்தது. எனினும் உணவு விலைகள் வருடத்திற்கு வருடம் 12.7 சதவீதம் உயர்ந்தது. மேமாதத்தில், ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரத்தில் பணவீக்கம் 7.9 சதவீதம் ஆக அதிகரித்தது. இது 1973/1974 குளிர் காலத்தில் ஏற்பட்ட முதல் எண்ணெய் நெருக்கடிக்குப் பின் மிக உயர்ந்த மட்டம் என Destatis தெரிவித்துள்ளது. உயர்பணவீக்கம் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதை அடுத்து, ஜெர்மன் மக்கள் அதிகரித்து வரும் விலைகள் உயர்வினால் சிரமப்படுகின்றனர் என சமீபத்திய பொலிட்பேரோமீட்டர் கணக்கெடுப்பு கூறுகிறது. ஐரோப்பா முழுதும் உள்ள பணவீக்க விகிதங்களை நடுத்தர காலத்தில் இலக்கான 2 சதவீதத்துக்கு கீழே தள்ளும் அடிப்படையில் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஜூலையில் அதன் முக்கிய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.