ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு உரிமை கொள்வதற்கு தற்காலிக தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடிய வகையில் நிலம், கட்டிடம், மரம், இவைகளுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் தீர்மானித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களை கைப்பற்றவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
ஜெ.தீபா தரப்பில் உள்ள கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, “ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்த பொழுது நீங்கள் எங்கிருந்தீர்கள்?” என கேள்வி கேட்டார். மீண்டும் இந்த வழக்கை தீபா தொடர்ந்ததால், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். இதற்கு முன்னர் வேதா நிலையம் வீட்டை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவித்திருந்த தீபாவின் சகோதரர் தீபக் கொடுத்த வழக்கானது இதேபோல் இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.