முதல்வர் ஜேம்ஸ் பாண்டை போல் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. முன்னதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதிலும் சாலையில் தேங்கிய நீர் வடிய வில்லை. மழை பெய்ய ஆரம்பித்ததிலிருந்து பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதில் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் மழைநீர் வடிகால் சரிவர தூர்வாரப்படவில்லை என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மழைக்காலம் முடிந்த பிறகு இதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுகவினர் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த திட்டத்தை மாநில அரசு மேற்கொள்வது கிடையாது.
மத்திய அரசு குழுவினர் நேரடியாக வந்து ஆய்வு நடத்தி பின்னரே நிதி ஒதுக்கீடு செய்வார்கள். ஆனால் ஊழல் நடந்து இருப்பதாக கூறுகிறார்கள். ஊழல் நடந்து இருந்தால் அதை கண்டுபிடிக்க வேண்டும் தானே. கடந்த ஆட்சி மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் குறை கூறுவதை விட்டுவிட்டு மக்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும். அதைத் தவிர்த்து விட்டு விளம்பரத்துக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மழைக்காலத்தில் முதல்வர் பார்ப்பதற்கு ஜேம்ஸ்பாண்ட் போல் உள்ளார். மக்களும் ஏதோ சூட்டிங் நடப்பதுபோல் அவரை பார்க்கின்றனர். முதல்வரை பார்ப்பதுபோல் பார்ப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.