வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம், அரை கிலோ வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டபாளையத்தில் 5 தளங்களுடன் இயங்கிவரும் நகைகடையில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் பின்புற சுவற்றில் துளை இட்டு ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள் நகை கடையில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சிங்கம் முகமூடி போட்டுக் கொண்டு கொள்ளையன் உலா வரும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் சிசிடிவி கேமரா மீது foam spray அடித்த காட்சி வெளியாகியுள்ளது. இந்த கொள்ளையனை பிடிப்பதற்காக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.