ஆன்லைன் மோசடியில் 2 பேர் 6 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிக்கை பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு கடந்த 3-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உங்களுக்கு டபுள் தமாக்கா ஆஃபர் ஸ்கீமில் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசில் உங்களுக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விழுந்துள்ளது. இதற்கு வரி பணமாக 4 லட்சத்து 25 ஆயிரம் கட்ட வேண்டும் என அதில் இருந்தது. இதை நம்பிய ஆதிலட்சுமி அதில் வந்திருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர் முனையில் பேசிய நபர் உங்களுக்கு பரிசு பணம் விழுந்துள்ளது என்றும், அதற்கு வரி பணம் செலுத்துங்கள் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு ஆதிலட்சுமி அந்த மர்மநபர் கூறிய வங்கிக் கணக்கில் 4,22,000 ரூபாயை செலுத்தியுள்ளார்.
அதன்பின் அந்த நபருக்கு தொடர்பு கொண்டு பேசிய போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆதிலட்சுமி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதேபோன்று கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் செல்போன் நம்பருக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பகுதிநேர வேலை இருக்கிறது என்றும் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் இருந்தது. இந்த குறுஞ்செய்தியை உண்மை என நம்பிய சிலம்பரசன் அதிலிருந்த வங்கி கணக்குக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். அதன்பின் அந்த நபரிடம் இருந்து எந்த ஒரு செய்தியும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிலம்பரசன் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இவ்விரு புகார்கள் குறித்தும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.