உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து அவருடன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண்ணுக்கு முபாரிக்பூர் கிராமத்தில் உள்ள நௌஜீல் பகுதியில் இன்று வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்தது.
இது குறித்து அறிந்த அந்த இளைஞர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளைஞர், திருமண நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். திருமண விழாவில் ஜெய் மாலா சடங்கு நிறைவுற்ற நிலையில் மணமகள், ரெடி ஆவதற்கு அவரது அறைக்கு சென்ற போது பின் தொடர்ந்த காதலன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சரமாரியாக சுட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே மணமகள் சுருண்டு விழுந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மணமகள் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த உடனேயே, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.