கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எம்.ஜி.ஆர் நகரில் அரசு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு கீழ் கருமலை, வாட்டர்பால்ஸ், சோலையாறு என்ற 3 துணை கால்நடை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று சென்ற பிறகு இங்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
அதன்பின் மருத்துவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது கால்நடை உயிர் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் மட்டுமே இந்த மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் விலங்குகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெளியூரிலிருந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. எனது கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை பணி நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.