செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக்கை பற்றி சொல்லி இருக்கிறார். இந்த ஆட்சி நிச்சயமாக அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கான ஆட்சி இல்லை. அம்மா கிளினிக் என்று ஆரம்பித்துவிட்டு அங்கே டாக்டரையும் போடல, நர்ஸையும் போடல, பேருக்காக வைத்திருந்த கட்டிடத்திற்கு வாடகையும் கொடுக்கவில்லை. ஆக பேருக்காக டாக்டரும் இல்லாமல்,
நர்சும் இல்லாத ஒரு இடத்திற்கு கிளினிக் என்று பெயர் வைத்த காரணத்தால் தான், உள்ளபடியாக இருக்கிற மருத்துவ கட்டமைப்புகளை நாம் சிறப்பாக செய்ய வேண்டும், எப்படி இந்த கொரோனா பெருந்தொற்றை இந்த 6 மாத காலத்தில் 2-வது அலையை நாங்கள் கட்டுபடுத்தி இருக்கிறோம், அதேபோன்று 3வது அலைக்கு முன்பாக அனைவருக்கும் தடுப்பூசி இன்றைக்கு மிகப்பெரிய அளவிலே போட்டு முடித்திருக்கிறோம்.
ஆக இவற்றை எல்லாம் செய்யகூடிய பொது சுகாதார கட்டமைப்பில் பெரும் அக்கறை கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சர், ஒவ்வொரு நாளும் அவரே ஆய்வு செய்கிறார்கள். எனவே அரசியல் காரணங்களுக்காக அம்மா மினி கிளினிக் மூட வேண்டும் என்று சொன்னால், அம்மா உணவகங்கள் ஏன் இயங்கி கொண்டு இருக்கிறது ? என்பதற்கு அவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள். எனவே நிச்சயமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின்பால் இந்த அரசு செயல்படுவதில்லை என்பதை நான் நிச்சயமாக தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.