டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் போதை பொருளை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இந்த போதை பொருளை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மருந்து விற்பனையாளர்களிடம் பேசினார். அவர் டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அதன் பிறகு சில மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக தகவல்கள் வெளிவருகிறது. இதில் குறிப்பாக மன நோயாளிகள் பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே டாக்டர் சீட்டு இல்லாமல் வருபவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனையாளர்கள் வழங்கக்கூடாது என்றார். மேலும் பார்சல் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாவதால், பார்சல் நிறுவன ஊழியர்களுக்கும்போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.