விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முகிழ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கும், விஜய் சேதுபதிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்களும் வசூலில் தோல்வி அடைந்தது. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு இருவரும் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸானது. இந்த படம் சிறிய தியேட்டர் முதல் பெரிய தியேட்டர் வரை அனைத்து தியேட்டர்களிலும் வெளியானது. அதேபோல் விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் இணைந்து நடித்த முகிழ் படமும் தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்திற்கு சிறிய தியேட்டர்கள் கிடைக்காததால், பெரிய தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. இதில் டாக்டர் திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. இதற்கு காரணம் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். டாக்டர் படத்தின் வெற்றியை பொறுத்துதான் பீஸ்ட் படத்தின் வெற்றியும் இருக்கும் என நினைத்து ஏராளமான தளபதி ரசிகர்கள் டாக்டர் படத்தை போட்டி போட்டுக்கொண்டு பார்த்து வருகின்றனர். இது டாக்டர் பட வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆனால் விஜய் சேதுபதியின் முகிழ் திரைப்படம் பெரிய அளவில் புரமோஷன் செய்யாததால், எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. மேலும் இந்த படம் வெறும் 1 மணி நேரம் தான் என்பதால் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என கூறப்படுகிறது.