நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை மாற்ற முடிவு செய்துள்ளது.
கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி இனியும் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றும் நடைமுறையை ஊழியர்கள் தொடர முடியாது என்று தெரிகிறது. சமீபத்தில் இது குறித்து நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் கட்டாயமாக வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அலுவலகம் வரவேண்டும். ஏற்கனவே மூத்த ஊழியர்களுக்கும், குழு தலைவர்களும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும் நடைமுறையை தொடங்கிவிட்டனர் என்று குறிப்பிட்டு இருந்தது.
இது குறித்து வெளியிடப்பட்ட மின்னஞ்சலில், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் நாம் அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் நடைமுறையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து நமது மூத்த ஊழியர்களும், குழு தலைவர்களும் அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். தற்போது நமது மிகப்பெரிய அளவிலான ஊழியர்களும் அலுவலகம் வந்து பணியாற்றும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகம் வரவும் எந்தெந்த நாட்கள் என்பது குறித்து விரைவில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.