செல்லமாக வளர்க்கும் நாய்க்கு விவசாயியின் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திவான்சாபுதூரில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஹரசுதன் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டில் டாபு என்ற பொமேரியன் வகை நாயை வளர்த்து வருகின்றனர். இந்த நாய் தற்போது கர்ப்பமாக இருக்கிறது. இந்நிலையில் சிவகுமாரின் குடும்பத்தினர் நாய்க்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனை அடுத்து நாயை குளிப்பாட்டி புத்தாடை மற்றும் மாலை அணிவித்து அமர வைத்தனர்.
அதன் பிறகு தயிர் சாதம்,பருப்பு சாதம், புளி சாதம், தேங்காய் சாதம் உள்ளிட்ட ஏழு வகையான சாப்பாடு, ஐந்து வகையான இனிப்புகள் மற்றும் நாய்க்கு பிடித்த பழங்கள், பிஸ்கெட் ஆகியவற்றை வைத்து வளைகாப்பு நடத்தி நாய்க்கு சாப்பாடு ஊட்டப்பட்டது. இதனையடுத்து விழாவிற்கு வந்தவர்கள் நாய்க்குப் பொட்டு வைத்து கையில் வளையல் போட்டு விட்டனர். இதுகுறித்து மகாலட்சுமி கூறும்போது, டாபுவை நாங்கள் குழந்தை போல வளர்த்து வருகிறோம். டாபு நீண்ட ஆயுளுடன் எங்களுடன் இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.