தமிழகத்தில் நேற்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இந்த நிலையில்தான் நேற்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் 50 அரசு பரிசோதனை மையங்களும், 46 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன. நேற்று மட்டும் 35,423 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 13,52,360ஆக இருக்கின்றது. புதிதாக 3,616 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.
இல்லாத அளவாக நேற்று மட்டும் 4,545-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 71,116-பேர் மீண்டுள்ளனர். நேற்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,636-ஆக அதிகரித்துள்ளது. அதே போல 45,839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம் என்னெவெனில் இந்தியாவிலே நேற்று ஒரே நாளில் அதிகமானோரை குணப்படுத்திய மாநிலமாக தமிழகம் உள்ளது.
இந்தியளவில் நேற்று மட்டும் 16,849 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக தமிழகத்தில் 4,545 பேரும், மகாராஷ்டிராவில் 3,296 பேரும், டெல்லியில் 2,129பேரும், தெலுங்கானாவில் 1,506 பேரும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டிலே நேற்று ஒரே நாளில் அதிகமானோரை தமிழக சுகாதாரத்துறை குணப்படுத்தி அசத்தியுள்ளது.