கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகில் நடியப்பட்டு கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விருத்தாசலத்தை சேர்ந்த அசோகன் (51) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மதுபாட்டில்கள் விற்ற அடிப்படையில் வசூலான ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது புதுப்பேட்டை அருகே சென்ற போது அங்கு நின்ற மர்ம நபர்கள் 2 பேர் அசோகனை வழிமறித்தனர்.
இதையடுத்து அவர்கள் அசோகனை கட்டையால் சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதன்பின் அசோகன் திருடன்… திருடன் … என கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அசாகன் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இது தொடர்பாக புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.