ஆம்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கைலாசகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கடாபூர் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலும் பள்ளிவாசல் தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கும் அருகில் அரசு மதுபானக்கடை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனையடுத்து கடை முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதே இடத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்களும் அனைவரும் ஒன்றிணைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் உமராபாத் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி கடையை மூடியதால் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுமக்கள் சார்பாக கடையை முற்றிலுமாக அகற்ற மனு அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.