சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கோகுல் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 நபர்கள் கோகுலைக் கட்டையால் அடித்தது தெரியவந்தது.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த 2 நபர்கள் பாரில் பணியாற்றிய ராமநாதபுரத்தை சேர்ந்த செபாஸ்டியன் மற்றும் சிவகங்கையை சேர்ந்த கோபி என்று தெரியவந்தது. அதன்பின் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில, கோகுல் மதுபோதையில் டாஸ்மாக் பாருக்கு வெளியே வந்து படுத்துக்கொண்டதாகவும், நேற்று காலையில் இருந்தே இலவசமாக மது கேட்டு தகராறு செய்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனால் நாங்கள் அவரை அப்புறப்படுத்தும்போது கோபமடைந்த கோகுல் எங்களை தாக்கினார். மேலும் அருகில் இருந்த கல்லை எடுத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்த கோகுலை, தற்காப்புக்காக தாக்கியதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்