தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளின் இணைப்பாக செயல்படும் பார்களையும் ஆறுமாதங்களுக்கு மூட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளித்து பேசியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1719 பார்களை உடனடியாக மூட வேண்டும் எனவும் மீதமுள்ள பார்களை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட கூடிய ஒரு தீர்ப்பாகும். 2019 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை பார்களை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் ஊரடங்கு காலங்களில் பார்களை நடத்த முடியாமல் போனதால் தங்களுக்கான ஒப்பந்த கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி பார்களை நடத்த டாஸ்மாக்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறி தீர்ப்பளித்தார். மதுவிலக்கு சட்டம் 4ஏ பிரிவின் படி ஒருவர் குடித்துவிட்டு பொது இடங்களில் நடமாடினால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். திருவள்ளுவரின் பெருமையையும் அவரது அறிவையும் போற்றும் தமிழகம் அவரால் எழுதப்பட்ட கள்ளுண்ணாமையை மறந்தது ஏன் என எனக்குத் தெரியவில்லை…? தமிழகத்தில் தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை போல மது விவகாரத்திலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
மது வணிகத்தின் வழியே வரும் வருமானத்தை முதன்மையாக கொண்டு ஒரு மாநில அரசு செயல்படுவது வெட்கக்கேடான ஒரு செயலாகும். வருமானத்தை பெருக்க பல்வேறு வழிகள் உள்ளது இது குறித்த விரிவான தகவல்களை பாமக 2018ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் படி தமிழகத்தில் செயல்பட்டு வரும் 3719 பார்களுக்கு புதிய உரிமம் வழங்குவதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். 3719 பார்களும் உடனடியாக மூடப்பட வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உரிமத்துடன் செயல்பட்டு வரும் மீதமுள்ள பார்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் மூடப்பட வேண்டும்.