தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் அமைப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ள டெண்டர்களை தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் ஆகியவற்றுக்கு புதிய டெண்டரை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் ஆப்செட் பிரைஸ் என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு டெண்டர் விதிகளின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கான டெண்டரை இந்த மாதம் கோரவேண்டும் என்றும், பார்களை அமைக்க சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த புதிய மதுக்கூட ஒப்பந்தங்கள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த டெண்டர் விதிகளை எதிர்த்து ஆர் ரவீந்திரன் என்பவர் பார் உரிமையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் பார் வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை எனவும், உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையிலும், தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார் . எனவே இந்த டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இதனை விசாரணை செய்த நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் இறுதி டெண்டர் உறுதி செய்யப்பட்ட பிறகு, இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. மேலும் டெண்டர் விண்ணப்பங்களை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.