கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் சிறுமுகையை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. அதனருகே உள்ள பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கண்டணப் பட்டியைச் சேர்ந்த காளையப்பன் (27) என்பவர் ஊழியராக சென்ற 3 மாதமாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பாரின் உள்அறையில் 2 ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனிடையில் அறைக்கு வெளியே காளையப்பன் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்குவந்த அடையாளம் தெரியாத சில மர்மஆசாமிகள் காளையப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் பலத்தகாயமடைந்த காளையப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரின் அலறல் சத்தம்கேட்டு சக ஊழியர்கள் வெளியே வந்து பார்த்தபோது காளையப்பன் சடலமாக கிடந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், காசிபாண்டி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின் காளையப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் துப்புதுலக்க கோவையிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை நடைபெற்ற இடத்தில் பதிவான ரேகைளை பதிவு செய்தனர். இதேபோன்று கோவையிலிருந்து மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி அங்கு உள்ள பெட்ரோல் பங்க் வரை ஓடி நின்று விட்டது. இதுகுறித்து நேற்று மாலையில் கொலை கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் இறந்தவரின் நெருங்கிய உறவினர் என்பதும், காளையப்பன் திருப்பூரிலுள்ள டாஸ்மாக் பாரில் வேலைபார்த்தபோது, கொலை கும்பலுடன் முன் விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் காளையப்பன் அங்கு வேலையை விட்டு விட்டு சிறுமுகைக்கு வந்த சூழ்நிலையில் அந்த கும்பல் வெட்டிக்கொன்றது தெரியவந்தது.