குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே ஆதாரமாக வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்ப முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 2010ஆம் ஆண்டு 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இதைச் செய்தவர் 46 வயதான மூக்கன் என்ற முருகன் தான்.. பக்கத்து வீட்டில் இருக்கக் கூடிய சிறுமியை முருகன் பாலியல் வன்கொடுமை செய்ததால் உடனடியாக விராலிமலை காவல் நிலையத்தில், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தது..
இதை எதிர்த்து முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றமும் அந்தக் குற்றத்தை உறுதிசெய்தது.. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மிகவும் கொடூரமானது. காட்டு மிராண்டித்தனமானது என்ற வார்த்தையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தார்கள். இத்தகைய மிருகத்தனமான செயல்கள் குழந்தைகளின் மனதில் ஆழமான தாக்கத்தை உருவாக்குகின்றன.. நீண்ட காலத்திற்கு அல்லது அவர்களின் வாழ்நாள் முழுவதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளியின் 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது..
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் முருகன். அந்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது டிஎன்ஏ சோதனையில் தான் அந்த குற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை.. எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்..
அப்போது நீதிபதிகள் டிஎன்ஏ பரிசோதனை என்பது ரத்த மாதிரிகள் சேகரித்து அளிக்கக்கூடியது. சில நேரங்களில் சரியான நிலையில் எடுக்கப்படாமல் போகலாம். எனவே டிஎன்ஏ சோதனையை மட்டுமே வைத்துக்கொண்டு வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்ப முடியாது என்ற வார்த்தையை கூறினார்கள்.. அந்த சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள், மருத்துவ குழு வழங்க கூடிய ஆதாரங்கள் நேரடி சாட்சியங்கள் இவையெல்லாம் இருக்கும்பொழுது டிஎன்ஏ சோதனை மட்டும் வைத்து வழக்கிலிருந்து குற்றவாளி முயற்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே கீழமை நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் 10 ஆண்டு தண்டனையை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது..