Categories
தேசிய செய்திகள்

டிஎன்ஏ தடுப்பூசி முதல்… உலக நாடுகள் ஒற்றுமை வரை… ஐ.நா கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!!

பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி ஐ.நா சபையில் பேசியுள்ளார்..

ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடியது.. எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. இந்தியா வளர்ச்சியடையும் போது  உலகமும் வளர்ச்சியடையும். இந்தியா சீர்திருத்தம் அடையும் போது ஒட்டு மொத்த உலகமும் மாற்றங்களை அடைகிறது.

இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான், தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், தற்போது ஐநாவில் பேசுகிறேன். 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கொடிய கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தோற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

கடைக் கோடி மக்களைச் சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது. பலருக்கு வீடுகள் கொடுக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவ காப்பீடு போன்றவற்றை இந்திய அரசு அளித்து வருகிறது. நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாத 30 லட்சம் மக்களுக்கு வங்கி கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது உலகம் முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது . அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் ஜனநாயகத்தின் மூலம் சாத்தியமாகிறது. பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது.  சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக்கூடிய டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியாவில்  உருவாக்கியுள்ளோம். மூக்கு வழியே சொட்டுமருந்து போல் வழங்கக்கூடிய தடுப்பூசியும் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முன் வரவேண்டும்.

உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகம் தடுக்க வேண்டும்.
ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் அவர்களை காக்க வேண்டும்.
பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.. எந்த ஒரு நாடும் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது. நாம் உலகளாவிய பாதிப்புகளை புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள். பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக எடுப்பவர்கள், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுக விமர்சனம் செய்தார்..

Categories

Tech |