தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் அனைத்து போட்டி தேர்வுகளும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. அதன்படி இந்த மாதம் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப்-2ஏ பிரிவின் கீழ் வரும் 4 செயல் அலுவலர் பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இந்த பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்துக்கள் மட்டும் பதிவு செய்ய வேண்டும். வருகின்ற 21 ஆம் தேதி வரை கூட்டுறவுத்துறை தணிக்கை பிரிவில் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், ஏப்ரல் 30 ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.