தமிழகத்தில் அரசு பணி இடங்களுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவோருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்றால் கடந்த 2 வருடங்களாக அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியானது. அவற்றில் 2022ம் வருடம் 22 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்தது. மேலும் முதல் கட்டமாக குரூப் 4, 2 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட பாடத்திட்டம் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பான டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவோடு உள்ளவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்கள் மூடப்பட்டுள்ளது, உணவகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மூடுவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டபடி போட்டித் தேர்வுகளானது நடைபெறுமா என்ற அச்சம் தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த வருடமாவது அரசு வேலை வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் படித்து வரும் தேர்வர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.