டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் 32 வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் 2022-ல் பிப்ரவரி மாதம் குரூப்-2 தேர்வு, மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பாடத் திட்டங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வர்கள் அனைத்து போட்டித் தேர்வுக்கும் தமிழ் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ் தாளில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்வர்களின் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும். எனவே தகுதி தேர்வாக “தமிழ் மொழி தேர்வு” நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர கணக்கு மூலமாக தான் விண்ணப்பம் செய்ய வேண்டும். எனவே ஆதார் எண்ணை நிரந்தர கணக்குடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் குரூப்-2, குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல் தேர்வு நடத்தும் நேரம் இனிவரும் காலங்களில் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.