தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு வருடமும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் முன்பே அறிவிக்கப்பட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை நேற்று (பிப்.18) நண்பகல் 12:30 மணியளவில் வெளியிட உள்ளதாக TNPSC தலைவர் பாலச்சந்திரன் முன்னதாக அறிவித்திருந்தார்.
அதன்படி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்தபடி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான தேதிகளை வெளியிட முடிவு செய்தது. அந்த வகையில் பிப்ரவரி 23 -மார்ச் 23ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை செலுத்தலாம். அதன்பின் மே மாதம் 21-ஆம் தேதி குரூப்-2, 2A போட்டித் தேர்வுகளானது நடத்தப்பட்டு, இதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும். இதில் குரூப்-2 தேர்வானது 3 கட்டமாக நடைபெற இருக்கிறது.
அந்த வகையில் முதன்மை எழுத்து தேர்வானது செப்டம்பர் மாதம் நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். முன்பே அறிவித்தபடி டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளை 2 வகையாக எழுதலாம். அதாவது, தமிழில் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். இவற்றில் தமிழ் பிரிவில் 100 கேள்விகள், பொது அறிவு 75 மற்றும் 25 ஆப்டிடியூட் என்று 200 கேள்விகள் கேட்கப்படும்.
அதேபோன்று ஆங்கில மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், அறிவியல் 75 மற்றும் 25 ஆப்டிடியூட் என 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட மாட்டார்கள். தற்போது 5,830 காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளானது நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுகளை காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2A தேர்வு தேதிகள் 23/2/2022 ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.