தமிழகத்தில் அரசு துறைகளிலுள்ள முதல் நிலை பணி முதல் 4-ம் நிலை பணியிடங்கள் வரை அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வுக்கு ஏராளமானோர் தங்களை தயார் செய்து வரும் நிலையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்துக்கும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கியுள்ளது. அதேபோன்று ஆங்கில மொழி பாடத்தை நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா அல்லது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் தேர்வர்கள் இடையில் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர்களுடைய சந்தேகத்தை போக்கும் விதமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியமானது முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி தேர்வில் முதல் பகுதியில் கேட்கப்படும் 100 வினாக்களும் தமிழ் மொழிப் பாடத்தில் இருந்து கேட்கப்படும். அதனை தொடர்ந்து 2-வது பகுதியில் பொது அறிவு இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த தமிழ் மொழிப் பாடத்தில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே 2-வது பகுதி மதிப்பீடு செய்யப்படும். தமிழ் பாடப் பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தொண்டுகளும் என்று 3 பிரிவுகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று பொது அறிவுப் பிரிவில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு, இந்திய ஆட்சி, இந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.