தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலகம் உதவிப்பிரிவு அலுவலர் உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் முதுநிலை ஆய்வாளர் ஆகிய பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப் 2, 2A தேர்வு தொடர்பான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதில் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அவை தேர்வின் வாயிலாக நிரப்பப்படும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக குரூப் 2, 2A தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மே 21ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் எனவும் இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்மாதம் குரூப்-4 தேர்வுகால அட்டவணை வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார். இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
இத்தேர்வின் பாடத்திட்டம் தயார் செய்யும் பணி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். அதன்பின் அரசு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் தேதிகளை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தின் இடையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அப்போது தேர்வில் வழங்கப்படும் OMR சீட்டில் இருந்த தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலையே பிரித்து எடுக்கப்படும் என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகளை தேர்வாணைய தலைவர் வெளியிட்டு வருகிறார்.