டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த 18-ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மே 1-ம் தேதி குரூப்-2, 2ஏ தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குரூப்-2 தேர்வு மூன்று கட்டமாக நடைபெற உள்ளது என்றும், இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டிஎன்பிஎஸ்சி காலத்திற்கு ஏற்ப தேர்வர்கள் பயன்பெறும் விதமாக தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஒருமுறை நிரந்தர பதிவு (OTR – One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களுடைய ஆதார் குறித்த விவரங்களை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இணையத்தில் இணைக்க வேண்டும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது OTR உடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேசமயம் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி நாள். எனவே குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் தங்களுடைய ஆதாரை OTR பதிவுடன் இணைக்க வேண்டும். அதேபோல் ஏற்கனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்தவர்கள் மீண்டும் இணைக்க அவசியமில்லை என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.