கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப்-2 தேர்வுகளுக்கான நாட்களை அறிவித்து இருந்தது. தமிழகத்தில் படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடபட்டது. இந்த குரூப்-2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் போன்ற 116 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
மொத்தம் 5,831 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வும், 5,255 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 23 என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்பே விண்ணப்பித்தவர்களில் பலர் தங்களது விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பின், சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், மேலும் தாங்கள் செய்த அந்த தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி-க்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 14- 23ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு வாயிலாக விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது குறித்த முழு விபரங்களை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டும் விபரம் பெற்று கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.