தமிழகத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரச்சனை முடியும் வரை, அரசு துறைகளில் புதிய பணி நியமன அறிவிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல வருடங்களாக வன்னியர் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூலை மாதம் திமுக தலைமையிலான அரசு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டது.
மேலும் இன்ஜினியரிங் சட்டம் உட்பட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில், இட ஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
அதனால் உடனடியாக வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனை முடியும்வரை அரசு துறைகளில் புதிய பணி நியமன அறிவிப்புகள்நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவின் மீது நீதிமன்றம் இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதனால் தற்போதைய நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்ற நிலை தொடர்கிறது. அரசு துறைகளில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டாலும், மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினாலும், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.