டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்குவதற்காக தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை என்பது தொடங்கப்பட்டுள்ளது. இந்த உயர்கல்வித்துறை சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள், கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
இந்த நிலையில் மாநில உயர்கல்வித்துறை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் நியமனத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த பணி நியமனம் சரியான இட ஒதுக்கீடு மற்றும் சரியான கல்வி முறையை பின்பற்றாமல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
அந்த புகார் அடிப்படையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ( TNPSC ) அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை ஒப்படைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. மேலும் உயர்கல்வித்துறை துணைச் செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் இதுகுறித்து பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் விவரங்களை அனைத்து பல்கலைக்கழகமும் உயர்கல்வித்துறைக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.