தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்த தேர்வாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதேசமயம் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் இந்த ஆண்டு அரசு போட்டி தேர்வுகளுக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் 2022-ஆம் ஆண்டு முதல் தேர்வுகள் அனைத்தும் முறைப்படி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வர்கள் அனைத்து போட்டித் தேர்வுக்கும் தமிழ் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ் தாளில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்வர்களின் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும். இந்நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டவாறு குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த 75 நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை கிட்டதட்ட 32 வகையான போட்டி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அரசு அறிவித்தபடி கட்டாயம் தமிழ் தாள் நடத்தப்படும் என்று அவர் உறுதிபட கூறியுள்ளார்.