தமிழகத்தில் அரசுத்துறை பணி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணி வாங்க வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு தொடர்பாக எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன் ஒரு பகுதியாக புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு மற்றும் கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வுகளை நடத்த திட்டமிட்டு அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் தேர்வு நடைபெறும் நாளான நாளைய தினம் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதில் சிக்கல்கள் ஏற்ப்பட்டது. இதன் காரணமாக தேர்வு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து முழு ஊரடங்கின்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அதாவது தேர்வுகள் தங்களுடைய தேர்வு மைய அனுமதி சீட்டை காண்பித்து தேர்வு எழுத செல்லலாம் என்று அரசு தெரிவித்திருந்தது. ஆகவே திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்து இருந்தது.
ஆனால் தற்போது தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு வரும் ஜனவரி 11ஆம் தேதி அன்று நடைபெறும். தேர்வர்கள் தற்போது பதிவிறக்கம் செய்துள்ள அனுமதி சீட்டை உபயோகித்து தேர்வை எழுதலாம். மேலும் நாளை நடைபெற உள்ள கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.