டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த கும்பலிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டதால், அவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம் – ஹவுரா இடையே ஓடிக்கொண்டிருந்த அந்தியோதயா ரயிலில் ஏறினர். இதனை அடுத்து இவர்கள் இரண்டாவது இருக்கை வசதி உள்ள பெட்டியில் அமர்ந்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து வந்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகராக வந்த பெஸ்சி (33) என்பவர் அங்கு வந்து அவர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் டிக்கெட் இல்லை என்று அசால்டாக பதிலளித்துள்ளனர். இதனை தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்த உடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த கும்பல் டிக்கெட் பரிசோதகரை தாக்கி, அவரிடம் இருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் உடைமைகளை எல்லாம் வெளியில் தூக்கி வீசியுள்ளனர் .இச்சம்பவம் ஆலுவா ரயில்நிலையத்தில் இரவு ஒரு மணி அளவில் ரயில் வந்தபோது நிகழ்ந்துள்ளது.
இதன்பின் ரயில் திருச்சூர் ரயில் நிலையம் வந்த போது இதில் படுகாயமடைந்த பெஸ்சி அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையில் அந்த கும்பல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், இதில் தொடர்புடைய பலர் தப்பி ஓடி விட்டதால் சவுக்கத் அலி (27), அணிக் கூல் ஷேக் (25 ) என்ற 2 நபர்களை மட்டும் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பெஸ்சியிடமிருந்து பறித்து வெளியே வீசப்பட்ட பையை, சில பயணிகள் மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் அதிலிருந்த 30 ஆயிரம் பணம் மட்டும் திருடப்பட்டது தெரியவந்தது. ஒருவேளை இந்த பணத்தை இதே கும்பல் திருடியிக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனை அடுத்து டிக்கெட் பரிசோதகர் பெஸ்சிக்கு உள் காயங்கள் அதிகம் இருப்பதால் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவர் தந்த புகாரின் பேரில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை ரயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.