டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் குளத்தில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே சென்ற போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததால் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் அருகே நிறுத்தினார். பின்னர் பேருந்து கண்டக்டரும், ஓட்டுனரும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
அப்போது அச்சத்தில் அந்த வாலிபர் பேருந்தில் இருந்து இறங்கி அருகில் இருந்த குளத்தில் குதித்துவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் தேடியும் வாலிபரை கண்டுபிடிக்க இயலவில்லை. நேற்று காலை அந்த குளத்தின் கரையில் அமர்ந்திருந்த வாலிபரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.