மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்தவர்கள் மீனாட்சி, கயல் தோழிகளான இவர்கள் இருவரும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை வெளிக்காட்டி வந்துள்ளனர். இருவரும் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் லைக்ஸ்காக அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
எதற்கும் பயன்படாத இந்த லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும், கயலும் தங்களுடைய டிக்டாக் தனிநபர் கணக்கில் பதிவிட்ட வீடியோக்களே, தங்களின் வாழ்க்கைக்கு வினையாகும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மீனாட்சிக்கு டிக்டாக் செயலி மூலம் தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அந்த பெண் டிக்டாக் செயலியில் தன் ஆண் நண்பருடன் செய்யும் காதல் சேட்டைகளை எல்லாம் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த மீனாட்சிக்குச் சுகந்தியின் நட்பைத் துண்டித்துக் கொண்டனர்.
மீனாட்சியுடனான நட்பு துண்டானதும், ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது ஆண் நண்பர் செல்வா என்பவருடன் சேர்ந்து மீனாட்சி மற்றும் தோழி கயல் ஆகியோரின் டிக்டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலை மாதர்களாகச் சித்தரித்து டிக்டாக் செயலியில் பதிவிட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இது இவர்கள் இருவரது குடும்பத்திற்குத் தெரிய வர வீட்டில் புயல்வீசத் தொடங்கியது.
மீனாட்சியின் தோழியான கயலின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் அவரை வீட்டைவிட்டுத் துரத்தியதால் தற்போது காப்பகத்தில் தவித்து வருகிறார்.
இதையடுத்து, மீனாட்சி ஒத்தக்கடை காவல்நிலையத்திலும் , கயல் மதுரை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளனர். தேனியைச் சேர்ந்த சுகந்தி மற்றும் மதுரை செல்வா ஆகியோர் மீது ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் காவல்துறை பிடியிலிருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்ற சுகந்தியிடம் இரு செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், டிக்டாக், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒருவருடம் கருத்து பதிவிடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதுரையில் செவிலியர் மாணவி டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோக்களை தவறாகச் சித்தரித்து, வீடியோவாக பதிவிட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த பூபதி என்பவரைப் புகாரின் அடிப்படையில் ஒத்தக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.