டிக் டாக் தடைசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பயனர்கள் ரோபோசோவில் இணைந்ததாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினையைத் தொடர்ச்சியாக சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆழமாக இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதலாக டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டு, இச்செயலியை பயன்படுத்திய பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஆனாலும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அரசின் இந்த தடை உத்தரவை ஏற்றுள்ளனர் டிக்டாக் பயனாளர்கள்.
இந்தியாவில் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு உள்நாட்டு பொழுதுபோக்கு செயலிகள் தரப்பில் மிகுந்த வரவேற்பு ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக டிக்டாக் போன்ற செயலிகளால் தங்களது சந்தை மதிப்பை இழந்திருந்த ரோபோசோ, ஷேர்சாட் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மீண்டும் தங்களின் சந்தை மதிப்பையும் வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதை நம்ப முடியாத வகையில் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ரோபோசோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது பற்றி ரோபோசோ நிறுவனர் நவீன் திவாரி கூறுகையில், “டிக்டாக் தடை செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களது செயலியில் புதிதாக 5 லட்சம் பேர் இணைந்தனர். இந்த மாத இறுதிக்குள் 10 கோடி பேர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். சீன செயலிகளுக்கு தடைவிதித்த இந்திய அரசின் இந்த உத்தரவானது இந்திய ஸ்டார்ட் அப் துறைக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் ” என்றார் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் விரைவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவைத் தொடர்ந்து உலகின் நான்காவது மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக நம்மால் உயர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.