டெல்லி விவசாயிகள் டிசம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டெல்லியில் விவசாய சங்கங்கள் நடத்திய ஆலோசனையில், மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பரிந்துரைகளை நிராகரித்து போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளன. அதன்படி டிசம்பர் 12ஆம் தேதி டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டிசம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட முடிவு செய்துள்ளது பாஜக இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.