இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்யும்படி பல்கலைக்கழக அரசாணை மூலம் எப்படி கட்டாயப்படுத்த முடியும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் மாணவர்களை பல கல்லூரிகள் அரியர் தேர்வு எழுத நிர்பந்தம் செய்துள்ளன.
இந்நிலையில் இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.