Categories
மாநில செய்திகள்

டிச-16 முதல் நடை திறப்பில் மாற்றம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக டிச.16 முதல் 2022 ஜன.13 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நாட்களில் கோயில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். உச்சிகால பூஜை முடிந்து மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9 மணிக்கு பூஜை முடிந்து கோயில் நடைசாத்தப்படும். இந்நாட்களில் அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

எண்ணெய் காப்பு உற்ஸவம் டிச.,11 முதல் 19 வரை நடக்கிறது. இந்நாட்களில் மாலை 6:00 மணிக்கு அம்மன் உற்ஸவ சன்னதியில் தைலகாப்பு மற்றும் தீபாராதனை நடக்கும். பின் அங்கிருந்து புறப்பாடாகி ஆடி வீதிகளில் அம்மன் வலம் வருவார். டிச.,18 கோ ரதத்திலும், டிச.,19 கனக தண்டியலிலும் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். டிச.,20 திருவாதிரை அன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருவர்.

டிச.,11 முதல் 20 வரை நுாறு கால் மண்டபம் அருகில் நடராஜர் சன்னதி முன் திருவெண்பா உற்ஸவம் நடக்கிறது. டிச.,20 பொன்னுாஞ்சல் அன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமி சன்னதியில் திருவெண்பா பாடி முடிந்ததும் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மவாகனத்திலும் ஆடி வீதிகளில் வலம் வருவர்.

ஆருத்ரா தரிசனம் டிச.,19 இரவு முதல் டிச.,20 அதிகாலை வரை நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். இக்கோயிலில் மட்டும்தான் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜக்குரிய ஐந்து உற்ஸவ சிலைகள் உள்ளன. அபிஷேக பொருட்களை கோயில் உள்துறை அலுவலகத்தில் டிச.,19 இரவு 7:00 மணிக்குள் பக்தர்கள் வழங்கலாம் என நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |